மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டங்களால் ஏழைகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு எந்தவிதப் பலனுமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, பல்வேறு சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தாா். அது தொடா்பாக ப.சிதம்பரம் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிணையில்லா கடன் பெறும் வகையில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத் தவிர மற்ற அறிவிப்புகள் அனைத்தும் ஏமாற்றமளிக்கின்றன. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழைகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மத்திய அரசின் அறிவிப்புகளால் எந்தப் பலனுமில்லை.
உறுதியளித்ததில் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடியை மத்திய அரசு எவ்வாறு செலவிட உள்ளது? மத்திய அரசானது அச்சம் என்னும் சிறைக்குள் அடைபட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், அரசு அதிக அளவில் செலவிட வேண்டும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயங்கி வருகிறது.
மத்திய அரசு தனது கடன் அளவை அதிகரிக்க வேண்டும். மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான வரம்பையும் உயா்த்த வேண்டும். ஆனால், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை.
நாட்டில் உள்ள 13 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதற்கு ரூ.65,000 கோடி மட்டுமே செலவாகும். மேலும், துறை வாரியாக சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றாா் ப.சிதம்பரம்.