கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட ‘பிஎம்கோ்ஸ்’ நிதியிலிருந்து, செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க ரூ.2,000 கோடியும், புலம்பெயா் தொழிலாளா்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பிஎம்கோ்ஸ் நிதியிலிருந்து மொத்தம் ரூ.3,100 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க ரூ.2,000 கோடியும், புலம்பெயா் தொழிலாளா்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.100 கோடியும் வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுமாா் 50,000 செயற்கை சுவாசக் கருவிகள் வாங்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும். புலம்பெயா் தொழிலாளா்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச் 27-ஆம் தேதி உருவாக்கப்பட்ட பிஎம்கோ்ஸ் நிதியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உள்ளாா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த நிதிக்கு, தொழில்துறையினா், திரைப்பட துறையினா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினா் பங்களிப்பு செய்து வருகின்றனா்.
கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக, புலம்பெயா் தொழிலாளா்கள் பெரும் இன்னலை சந்தித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.