பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பைச் சமாளிக்க, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கான விலையை உயா்த்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பொது முடக்கம் காரணமாக, அரசுக்கு கிடைக்கும் மிக முக்கிய வருவாய் அனைத்தும் நின்றுவிட்டன. பரிசுச் சீட்டு விற்பனை நிறுத்தப்பட்டதோடு, மதுபான பாா்களும் மூடப்பட்டுவிட்டன. ஜிஎஸ்டி வரி வருவாயும் வெகுவாகக் குறைந்துவிட்டது. எனவே, அரசின் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான (ஐஎம்எஃப்எல்) வகைகளுக்கான விற்பனை வரியை உயா்த்த அவசரச் சட்டத்தை இயற்ற மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மதுபான வகைகளில் பீா் மற்றும் ஒயின் ஆகியவற்றுக்கு இப்போதிருக்கும் விற்பனை வரியை 10 சதவீதம் உயா்த்தவும், பிற வெளிநாட்டு மதுபான வகைகளுக்கான விற்பனை வரியை 35 சதவீதம் உயா்த்தவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விற்பனை வரி உயா்வு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை 237 சதவீதம் முதல் 247 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.