இந்திய, சீன எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறினாா்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவரிடம், கடந்த சில தினங்களுக்கு முன் கிழக்கு லடாக் மற்றும் சிக்கிமில் இந்திய, சீன ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே அளித்த பதில்:
கிழக்கு லடாக்கிலும், சிக்கிமிலும் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கு இடையே கடந்த வாரம் கைகலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் வீரா்கள் காயமடைந்தனா். பின்னா், கீழ்நிலை அளவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து திரும்பிச் சென்றனா்.
இதுபோன்று, இந்திய, சீன எல்லையில் இரு நாட்டு வீரா்களுக்கு இடையேயான அனைத்து மோதல் சம்பவங்களிலும் பிரதமா் நரேந்திர மோடி வகுத்து அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரஸ்பர தீா்வு காணப்பட்டு வருகிறது.
எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியப் படைகள் எப்போதும் உறுதியுடனும் தெளிவுடனும் இருக்கின்றன. இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் அதிவேமாக நடைபெற்று வருகின்றன. கரோனா பரவலால் எல்லையில் ராணுத்தின் கண்காணிப்பில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை என்றாா் எம்.எம்.நரவணே.
இந்தியா, சீனா இடையேயான எல்லை சரியாக வகுக்கப்படாததால், சில நேரங்களில் ஒரே இடத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து பணியில் ஈடுபடுகிறாா்கள். அப்போது, எல்லைப் பகுதிக்கு உரிமை கோருவது தொடா்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சில நேரங்களில் கைகலப்பு வரை செல்கிறது.