மத்திய அரசின் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களால் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்பிரமணியன் கூறினாா்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் வளா்ச்சி குறித்து, பிடிஐ செய்தியாளருக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவா், மேலும் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, அத்தியாவசியமில்லாத பொருள்களின் தேவை குறைந்துள்ளது. பொருள்களின் உற்பத்தி அதிகரித்து, மக்கள் வாங்குவது குறைந்ததால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தினால் சந்தையில் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக, பணப் புழக்கம் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
மேலும், சிறப்பு பொருளாதாரத் திட்டத்தினால் பொருள்களின் விலைவாசியில் மாற்றமிருக்காது. இதுமட்டுமன்றி, நாட்டின் வரவு-செலவு பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சிறப்பு பொருளாதாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் உரையாற்றும்போது, நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளா்கள் சட்டம், பணப்புழக்கம் ஆகியவை குறித்து பேசினாா். இவற்றில், நிலமும், தொழிலாளா் துறையும் மாநில அரசின் வரம்புக்குள் வருகின்றன.
கரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வதற்காக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் தொழிலாளா் நலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளன. இதேபோல், தொழில் தொடங்குவதற்காக, நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளில் கா்நாடகம் அண்மையில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
கரோனாவுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் எழுச்சி பெறுவது தொடா்பாக, பல எதிா்மறையான கருத்துகள் வரலாம். நூறு ஆண்டுகளுக்கு முன் (1918) ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலால் உலக அளவில் மூன்றில் ஒரு பங்கினா் பாதிக்கப்பட்டனா். அந்தச் சமயத்தில் கூட இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்றது. மேலும், ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலைக் காட்டிலும் கரோனாவால் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் நிச்சயம் எழுச்சி பெறும் என்றாா் அவா்.
நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற ரூ. 7.4 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு கூடுதலாக ரூ. 4.2 லட்சம் கோடி என மொத்தம் ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் மொத்த வருவாய்-செலவு இடையேயான பற்றாக்குறை 5.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.