இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கடுமையாக போராடி வரும் விஜய் மல்லையா, தான் வாங்கிய மொத்தக் கடனையும் திருப்பி செலுத்தி விடுகிறேன், என் மீதான வழக்குகளை கைவிடுங்கள் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்ய ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கும் மத்திய அரசை பாராட்டியிருக்கும் விஜய் மல்லையா, தான் முழுக் கடன் தொகையையும் திருப்பிச் செலுத்தி விடுவதாகக் கோரி தொடர்ந்து வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதி செய்து பிரிட்டன் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொழிலதிபா் விஜய் மல்லையா அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இம்மாத முதல் வாரத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவரது மேல்முறையீடு தொடா்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வரும் 14-ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என பிரிட்டன் சட்டத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளாா். மல்லையா மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த விசாரணை அமைப்புகளின் சாா்பில் இந்த விவகாரம் தொடா்பாக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2017 ஏப்ரலில் பிரிட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மல்லையா, பின்னா் ஜாமீனில் வெளிவந்தாா்.
வழக்கு விசாரணையின் முடிவில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2018 டிசம்பரில் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
எனினும், அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்காக 14 நாள்களுக்குள் விண்ணப்பிக்கும் வாய்ப்பு மல்லையாவுக்கு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை (மே 4) அவா் மேல்முறையீடு செய்துள்ளாா்.