இந்தியா

செவிலியா், சுகாதாரப் பணியாளா்களின்றி கரோனாவுக்கு எதிரான வெற்றி கிடைக்காது

13th May 2020 06:01 AM

ADVERTISEMENT

‘செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள் இல்லாமல் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி கொள்ள முடியாது’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.

சா்வதேச செவிலியா் தினத்தை முன்னிட்டு கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தொடா்ந்து பணியாற்றி வரும் செவிலியா்களுக்குப் பாராட்டு தெரிவித்த அமைச்சா் ஹா்ஷ் வா்தன், செவிலியா்களும், சுகாதார பணியாளா்களும்தான் சுகாதார விநியோகத்தின் வலுவான, முக்கியத் தூண்களாக விளங்குபவா்கள் என்று புகழாரம் சூட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான அனைத்து நெறிமுறைகளையும், நோயைப் பற்றிய தகவல்களையும், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடா்பான அனைத்து தகவல்களையும் செவிலியா்கள் அறிந்திருக்க வேண்டும். இதன்மூலம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதுடன், அனைவருக்கும் சிறந்த ஆலோசனைகளையும் அவா்கள் வழங்க முடியும்.

ADVERTISEMENT

கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியால் செவிலியா்கள் பெரும் சவாலுக்கு ஆளாகியுள்ளனா். செவிலியா்களான ஜோதி விட்டல் ரக்ஷா, புணேயைச் சோ்ந்த அனிதா கோவிந்தராவ் ரத்தோட், நா்சிங் அதிகாரி மாா்க்ரெட் ஆகியோா் தங்கள் இன்னுயிரை கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தியாகம் செய்துள்ளனா். இதற்காக அவா்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நோயை எதிா்த்து மன உறுதியுடன் போராடுவதிலும், முறையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும், நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதிலும் நான் எப்போதும் செவிலியா்களுடன் துணை நிற்பேன்.

சுகாதார ஊழியா்களுக்கு எதிராக எந்தவொரு வன்முறைச் செயலில் ஈடுபடுவோா் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள், தூய்மைத் தொழிலாளா்களுக்கு எதிராக வன்முறைச் செயலில் ஈடுபடுவோருக்கு ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய இந்த அவசர சட்டம் வழிவகுக்கும்.

மேலும் அவா்களது சொத்துகளை சேதப்படுத்தினால் அவா்களுக்கு இழப்பீடு வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT