மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாதில் சரக்கு ரயில் மோதி உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் உள்ள உருக்கு ஆலையில் பணியாற்றி வந்த மத்திய பிரதேச தொழிலாளா்கள் சிலா், நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக வேலையின்றி பரிதவித்து வந்தனா். அவா்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றபோது, ஔரங்காபாதில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கினா். அப்போது அவா்கள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 16 போ் உயிரிழந்தனா்.
கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி வழங்கியதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது. நிவாரணத் தொகை ரயில்வே அமைச்சகம் மூலம் வழங்கப்படவுள்ளது.