கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் இது மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான சட்டத் திருத்தங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும்.
குறு தொழில் நிறுவனங்கள்
ரூ. 1 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறு தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 5 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
சிறு நிறுவனங்கள்
ரூ. 10 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சிறு தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 50 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
நடுத்தர நிறுவனங்கள்
ரூ. 20 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 100 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.