இந்தியா

மகாராஷ்டிரத்தில் உணவில்லாமல் 2 நாட்கள் பட்டினியோடு இருந்த சிறுமி தற்கொலை 

13th May 2020 12:28 PM

ADVERTISEMENT

 

மும்பை: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாப்பிட உணவில்லாமல் குடும்பத்தோடு பட்டினி கிடந்த 17 வயது சிறுமி மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ஜால்கோன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது நான்கு சகோதர, சகோதரிகளுடன் கடந்த 4 நாட்களாக உண்ண உணவில்லாமல் பசியில் வாடியிருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனிதா கெம்சந்த் சாவன் (17), தனது தந்தை மற்றும் 3 சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் மும்பையில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள ஜல்கோனியின் ரைசோனி நகரில் வசித்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ரைசோனி நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அனில் பட்குஜர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, எந்த வருவாயும் இல்லாத நிலையில், இவர்களது வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சாப்பிட எந்த உணவும் இல்லாமல் அனைவரும் பட்டினியோடு இருந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் அந்த வீட்டுக்குச் சென்றோம். அப்போது வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட எந்த உணவும் இல்லை. வெறும் தண்ணீரை குடித்துக் கொண்டு அனைவரும் இருந்துள்ளனர். சில நாட்கள் வரை சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு கொடுத்த உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளி. ஊரடங்கு காரணமாக எந்த வேலையும் இல்லாமல் சாப்பிட உணவின்றி குடும்பமே தவித்து வந்துள்ளது.

இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை அனிதாவின் தந்தை வெளியே சென்றிருந்த போது, ஒரு சிறிய அறையில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT