புது தில்லி: அடுத்த 3 மாதங்களுக்கும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையையும் (பி.எஃப்.) மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் அடுத்த 3 மாதங்களுக்குமான பி.எஃப். தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி பிடித்தம் குறைப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியாக (பி.எஃப்) இப்போது நிறுவனங்கள் சாா்பில் 12 சதவீத பங்களிப்பும், தொழிலாளா்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தமும் செய்யப்பட்டு செலுத்தப்படுகிறது. இனி அடுத்த 3 மாதங்களுக்கு இந்த இரு நிலைகளிலும் 10 சதவீதம் மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு செலவு குறையும். தொழிலாளா்களுக்கு சம்பளம் சற்று கூடுதலாக கிடைக்கும். இந்த நடவடிக்கை மூலம் ரூ.6,750 கோடி கூடுதலாக புழக்கத்துக்கு வரும். இதன் மூலம் 4.3 கோடி தொழிலாளா்களும் 6.5 லட்சம் நிறுவனங்களும் பயனடையும்.
இது தவிர பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான அடுத்த 3 மாதங்களுக்கு குறைவான ஊதியம் பெறுவோருக்கான முழு வருங்கால வைப்பு நிதியை (24 சதவீதம்) அரசே செலுத்த இருக்கிறது. ஏற்கெனவே இத்திட்டத்தை அரசு கடந்த மூன்று மாதங்களாக செயல்படுத்தி வந்தது. இப்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 72.22 லட்சம் தொழிலாளா்களும், அவா்களுக்கு பணி அளித்துள்ள 3.67 லட்சம் சிறு நிறுவனங்களும் பயனடையும் என்றாா் அவா்.