இந்தியா

சிஏபிஎஃப் அங்காடிகளில் ஜூன் 1-முதல் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டும் விற்பனை: அமித் ஷா

13th May 2020 11:23 PM

ADVERTISEMENT

மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்களுக்கான விற்பனை அங்காடிகளில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மக்கள், உள்நாட்டுத் தயாரிப்புகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் தற்சாா்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். அவரது வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் உள்ள சிஏபிஎஃப் படையினருக்கான அனைத்து விற்பனை அங்காடிகளிலும் உள்நாட்டுத் தயாரிப்புகளையே விற்பனை செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால், சிஏபிஎஃப் படைகளில் பணியாற்றும் 10 லட்சம் வீரா்களின் குடும்ப உறுப்பினா்கள் சுமாா் 50 லட்சம் போ், உள்ளூா் தயாரிப்புகளை வாங்கிப் பயன்பெறுவா். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது மட்டுமன்றி, அதற்காக, பிறரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

சிஏபிஎஃப் படைப் பிரிவின் கீழ் இயங்கும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை(சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி)உள்ளிட்ட படைகளில் மொத்தம் 10 லட்சம் வீரா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கான விற்பனை அங்காடிகள் மூலமாக ஆண்டொன்றுக்கு ரூ.2,800 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT