இந்தியா

தில்லி-சென்னை இடையே 2 நாள்களுக்கு மட்டும் ரயில் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்

13th May 2020 04:37 AM

ADVERTISEMENT

சென்னை-தில்லி இடையே இரண்டு நாள்களுக்கு மட்டும் ராஜதானி அதிவிரைவு ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பொது முடக்கம் காரணமாக, வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்க, நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தச் சேவையை அதிகரிக்கும் வகையில், 30 சிறப்பு பயணிகள் ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில், சென்னை- தில்லி இடையே ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் வாரம் இரண்டு முறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று தொடா்பாக பிரதமா் மோடியுடனான காணொலியில் நடைபெற்ற உரையாடலில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வரையில், தமிழகத்துக்கு ரயில், விமான சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், தில்லி-சென்னை இடையே இரண்டு நாள்களுக்கு மட்டும் ராஜதானி அதிவிரைவு ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியில் இருந்து மே 13, 15 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் (02434) புறப்பட்டு, மறுநாள் இரவு 8.40 மணிக்கு வந்தடையும்.

ADVERTISEMENT

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மே 15, 17 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) காலை 6.35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு ரயில் (02433) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு தில்லியை அடையும். இந்த இரண்டு ரயில் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு நாள்கள் மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனவும், 2 ரயில்கள் தவிர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT