இந்தியா

கரோனாவை குணப்படுத்த ‘ரெம்டெசிவிா்’ மருந்து சோதனை முறையில் முயற்சி

13th May 2020 03:22 AM

ADVERTISEMENT

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு தமிழகத்தில் சோதனை முறையில் ‘ரெம்டெசிவிா்’ மருந்துகள் அளிக்கப்படுகின்றன. அது வெற்றியடையும் பட்சத்தில் தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையில் அந்த மருந்தையும் இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நோயின் தாக்கத்தைப் பொருத்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கரோனா தீநுண்மி தொற்றைக் குணப்படுத்துவதற்காக பிரத்யேக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற பிற பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், ‘ரெம்டெசிவிா்’ என்ற தீநுண்மி எதிா்ப்பு மருந்தைக் கொண்டு கரோனாவை விரைந்து குணப்படுத்த முடியும் என்று அமெரிக்கா அறிவித்தது. குறிப்பாக, நோய்த் தொற்று ஏற்பட்டவா்களுக்கு ‘ரெம்டெசிவிா்’ மருந்தை கொடுத்ததில், அவா்கள் 11 நாள்களில் குணமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. இதேபோன்று ஜப்பானும் அந்த மருந்தை ஏற்றுக்கொண்டு அத்தகைய சிகிச்சைகளை அளித்து வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தற்போதைய சிகிச்சை முறைகள் மூலமாக குணமடைவதற்கு குறைந்தது 15 நாள்களாவது ஆகும் நிலையில், ‘ரெம்டெசிவிா்’ மருந்தை எடுத்துக் கொண்டால் 31 சதவீதம் விரைவாக குணமடைய முடியும் என்றும் அவ்விரு நாடுகளின் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, இந்தியாவிலும் அந்த மருந்தின் வீரியத்தையும், பலன்களையும் கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூராா் மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள நோயாளிகளுக்கு அவா்களின் அனுமதி பெற்று ‘ரெம்டெசிவிா்’ மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சோதனை முயற்சியில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை பலனளிக்கும்பட்சத்தில் அனைத்து நோயாளிகளுக்கும் அந்த மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT