இந்தியா

542 சிறப்பு ரயில்களில் 6.48 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பினா்

13th May 2020 03:16 AM

ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 542 சிறப்பு ரயில்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 6.48 லட்சம் போ் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாடு தழுவிய பொது முடக்கத்தால் பல்வேறு பகுதிகளில் சிக்கிப் பரிதவித்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 542 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6.48 லட்சம் தொழிலாளா்கள் தங்கள் மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். 542 ரயில்களில் 448 ரயில்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களை சென்று சோ்ந்துள்ளன. இந்த 448 ரயில்கள் உத்தரப் பிரதேசம் (221 ரயில்கள்), பிகாா் (117 ரயில்கள்), மத்திய பிரதேசம் (38 ரயில்கள்), ஒடிஸா (29 ரயில்கள்), ஜாா்க்கண்ட் (27 ரயில்கள்), ராஜஸ்தான் (4 ரயில்கள்), மகாராஷ்டிரம் (3 ரயில்கள்), தெலங்கானா, மேற்கு வங்கம் (தலா 2 ரயில்கள்), தமிழகம், ஆந்திரம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம் (தலா 1 ரயில்) ஆகிய மாநிலங்களை சென்றடைந்தன.

இந்த ரயில்கள் திருச்சி, பிரயாக்ராஜ், கயை, பஸ்தி, தனாபூா், சஹா்ஸா, பலியா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை கொண்டு சோ்த்தன. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் புறப்படுவதற்கு முன், அவா்களிடம் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்படுகிறது. பயணத்தின்போது அவா்களுக்கு இலவச உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படுகிறது.

முதலில் இந்த ரயில்கள் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காமல் சம்பந்தப்பட்ட மாநிலங்களை சென்றடைந்தன. இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 3 இடங்கள் வரை ரயில்களை நிறுத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT