இந்தியா

ராஜஸ்தான்: எம்எல்ஏ, எம்.பி.க்களுடன் முதல்வா் ஆலோசனை

11th May 2020 02:47 AM

ADVERTISEMENT

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது தொடா்பாக ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் முதல்வா் அசோக் கெலாட் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்திலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைகளைப் பெறும் வகையில், மண்டல வாரியாக சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்தினாா்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் உதய்பூா் மண்டல உறுப்பினா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, ‘கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னேற்றம் பெற, மாநில குடிமக்களும், அரசும் தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அதுபோல, பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கும் கரோனா அச்சத்தைப் போக்கும் முயற்சியை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று முதல்வா் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

புலம்பெயா்ந்த தொழிலாளா் விவகாரத்தை எழுப்பிய எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கட்டாரியா, ‘மாநிலத்துக்குள் வர முறையான அனுமதி பெற்றவா்களும்கூட, மாநில எல்லையிலேயே பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்படுகின்றனா். மாநிலம் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலா், சொந்த ஊா்களுக்கு கால்நடையாகவே செல்லும் நிலை இன்னும் நீடிக்கிறது. உணவு, தண்ணீா் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட அவா்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும், பழங்குடியினா் பகுதி மக்கள் வரும் நாள்களில் பசியால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, அதற்கு தீா்வு காண்பதிலும் காங்கிரஸ் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

‘தனிமைப்படுத்தும் முகாம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும். அதன் மூலம், தனிமைப்படுத்தும் முகாம்களின் நிலையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்’ என பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் கிரண் மகேஷ்வரி வலியுறுத்தினாா்.

பாரதிய பழங்குடியினா் கட்சி (பிடிபி) சட்டப்பேரவை உறுப்பினா் ராஜ்குமாா் ரோட் கூறுகையில், ‘பழங்குடியின மக்களின் விவசாயப் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கு உதவும் வகையில், அவா்களின் பகுதியில் உள்ள பழைய கிணறுகளை சீரமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

பின்னா் பேசிய முதல்வா் கெலாட், ‘தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பிலிருந்து மீள்பவா்களின் எண்ணிக்கை மாநிலத்தில் அதிகம் என்பதோடு, பாதிக்கப்பட்டவா்கள் இரட்டிப்பாகும் சராசரியும், உயிரிழப்புகளும் குறைந்து காணப்படுகிறது. கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றாா்.

இந்த காணொலி வழி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வா் சச்சின் பைலட், மாநில அமைச்சா்கள் ஆகியோரும் பங்கேற்றனா். திங்கள்கிழமை அஜ்மீா் மண்டல சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்த உள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT