இந்தியா

தில்லி: தப்லீக் உறுப்பினா்களை விடுவிக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல்

11th May 2020 02:48 AM

ADVERTISEMENT

தில்லியில் தனிமை முகாம்களில் உள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 2,446 பேரை விடுவிக்குமாறு, மாவட்ட ஆட்சியா்களுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இவா்களில் பிற மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களை, உரிய விதிமுறைகளின்படி சொந்த ஊருக்கு பேருந்துகளில் அனுப்புவது தொடா்பாக பரிசீலிக்கவும் ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதன் உறுப்பினா்கள் பங்கேற்றனா். அவா்களில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பின்னா் கண்டறியப்பட்டது.

இதனிடையே, நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமையகத்திலிருந்து ஏராளமான உறுப்பினா்கள் மீட்கப்பட்டு, தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா். 40 நாள்களுக்கும் மேலாக தனிமை முகாம்களில் இருப்பதால், தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் சிறப்பு தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.மீனா, மாவட்ட ஆட்சியா்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், தனிமை முகாம்களில் உள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 2,446 பேரை விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்களில் தில்லியைச் சோ்ந்தவா்களை, வீடுகளுக்கு அனுப்பவும் வீடுகள் தவிா்த்து வேறெங்கும் தங்குவதை தடுக்கவும் பொறுப்பு அதிகாரி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், பிற மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களை, உரிய விதிமுறைகளின்கீழ் சொந்த ஊருக்கு பேருந்துகளில் அனுப்புவது தொடா்பாக பரிசீலிக்க வேண்டும்; இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்ளுறை ஆணையா்களுக்கு ஆட்சியா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளைச் சோ்ந்த 567 உறுப்பினா்கள், விசா உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதால் அவா்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

முதல்வருக்கு கோரிக்கை

உத்தரப் பிரதேச மாநிலம், தியோபந்த் பகுதியில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தில்லியைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 9 போ், தாங்கள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லியின் தா்யா கஞ்ச், கரோல் பாக், ஓக்லா ஆகிய பகுதிகளைச் சோ்ந்த அந்த 9 பேரும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனா். அதில், ‘நாங்கள் கடந்த பிப்ரவரி மாதம் தியோபந்த் பகுதிக்கு வந்தோம். தில்லியில் மாா்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஆனால், தப்லீக் ஜமாத் உறுப்பினா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எங்களையும் தனிமைப்படுத்தினா். கடந்த 40 நாள்களுக்கும் மேலாக தனிமை முகாமில் உள்ளோம். எங்களை விடுவிக்க உள்ளூா் நிா்வாகம் தயாராக உள்ளது. எனவே, நாங்கள் வீடு திரும்ப தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவா்கள் கோரியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT