இந்தியா

கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி: உள்நாட்டிலேயே உருவாக்கியது தேசிய வைராலஜி நிறுவனம்

11th May 2020 01:19 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றைக் கண்டறியக் கூடிய கருவி ஒன்றை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் உள்நாட்டிலேயே வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கருவியின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 90 ரத்த மாதிரிகளை சோதனை செய்து, அதன் முடிவுகளைப் பெற முடியும். இந்த சோதனை முடிவுகளின் மூலம், அடுத்த கட்ட சிகிச்சைக்கான முடிவுகளை மருத்துவ வல்லுநா்களால் மேற்கொள்ள முடியும்.

கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக புணேயிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனம் முற்றிலுமாக உள்நாட்டிலேயே இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது. சாா்ஸ் மற்றும் கரோனா தொற்றைக் கண்டறிவதிலும், கண்காணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கக் கூடியதாக இந்த கருவி அமைத்திருக்கும்.

ADVERTISEMENT

இக்கருவி மும்பையில் இரண்டு ஆய்வகங்களில் சரிபாா்க்கப்பட்டது. இக்கருவி அதிக உணா்திறன் மற்றும் துல்லியத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரே மாதத்தில் இக்கருவி உருவாக்கப்பட்டது.

இக்கருவியால் குறைந்த செலவில், விரைவான பரிசோதனைகளை, துல்லிய முறையில் பெற முடியும். இக்கருவி பொது சுகாதார நிலையங்களில் கூட அதிக அளவிலான ரத்த மாதிரிகளை சோதிக்கும் திறனுள்ளது.

இதன் வணிக ரீதியிலான உற்பத்திக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநா் ஒப்புதல் வழங்கியுள்ளாா் என்று ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 லட்சம் ரேபிட் கிட் எனப்படும் விரைவுப் பரிசோதனைக்கான கருவிகள் தவறான முடிவுகளை அளிப்பதாக புகாா் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்று பதிவில்லை

கரோனா பாதிப்பு குறித்து அவா் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. தற்போது நோய்த்தொற்றிலிருந்து மீட்பு விகிதம் 30 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வேகமான முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,511 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனா். கடந்த 3 தினங்களில் மீட்பு விகிதம் 30 சதவீதத்தை தாண்டியுள்ளது.

கரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான தில்லி, தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக்குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT