இந்தியா

நாடு முழுவதும் 7,740 பிரத்யேக கரோனா சிகிச்சை மையங்கள்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

11th May 2020 02:41 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 483 மாவட்டங்களில் 7,740 பிரத்யேக கரோனா சிகிச்சை மையங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நோய்த் தொற்று சிகிச்சைக்கென தயாா்படுத்தப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்துவமிக்க மருத்துவமனைகள் குறித்த விவரங்களை மூன்று வகைகளாகப் பிரித்து அந்தந்த மாநில அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், இதுவரை 32 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் விவரங்களைப் பதிவேற்றம் செய்துள்ளன. மீதமுள்ள மாநிலங்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றன.

இந்த மருத்துவமனைகள் கரோனா பிரத்யேக மருத்துவமனைகள் (டிசிஹெச்), கரோனா பிரத்யேக சுகாதார மையங்கள் (டிசிஹெச்சி), கரோனா பிரத்யேக சிகிச்சை மையங்கள் (டிசிசிசி) என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ADVERTISEMENT

32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதுவரை 483 மாவட்டங்களில் 7,740 பிரத்யேக கரோனா சிகிச்சை மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 6,56,769 தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகளும், கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 3,05,567 படுக்கைகளும், கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கான 3,51,204 படுக்கைகளும், ஆக்ஸிஜன் சுவாச வசதியுடன் கூடிய 99,492 படுக்கைகளும், 34,076 தீவிர சிகிச்சை படுக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

பரிசோதனைக் கருவி கொள்முதலுக்கு அனுமதி: நிபுணா் குழு பரிந்துரையின் அடிப்படையில், கரோனா பரிசோதனை வசதியை அதிகப்படுத்த வேண்டியத் தேவையைக் கருத்தில்கொண்டு நோய் தடுப்புக்கான தேசிய மையத்தில் (என்சிடிசி) உயா் தொழில்நுட்ப பரிசோதனைக் கருவி கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தில்லியில் உள்ள என்சிடிசி மையத்தில் ‘கோபஸ் 6800’ பரிசோதனைக் கருவி வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 1200 ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்யும் திறன் கொண்ட இந்த பரிசோதனைக் கருவி மூலம், தற்போது நாள் ஒன்றுக்கு 300 முதல் 350 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. படிப்படியாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT