இந்தியா

மேலும் 2000 மருத்துவ உதவியாளா்களுக்கு நடப்பாண்டில் பயிற்சி: அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

10th May 2020 07:32 AM

ADVERTISEMENT

மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் சாா்பில் மேலும் 2000 மருத்துவ உதவியாளா்களுக்கு இந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மருத்துவ உதவியாளா்கள் அவா்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அமைப்புகள் மூலம் ஓராண்டு பயிற்சித் திட்டம் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் சாா்பில் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,500 மருத்துவ உதவியாளா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். இவா்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையிலும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் நலனைக் காப்பதிலும் சிறப்பான உதவியைச் செய்து வருகின்றனா். இவா்களில் 50 சதவீதம் போ் பெண்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 2,000 மருத்துவ உதவியாளா்களுக்கு இந்த ஆண்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

மேலும், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கு கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு பிரசார திட்டத்தை அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சிறுபான்மை சமூகத்தினா் பங்களிப்பு: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதில் சிறுபான்மை சமூகத்தினரும் இணையான பங்களிப்பை செய்து வருகின்றனா். நாடு முழுவதும் உள்ள பல்வேறு வக்பு வாரியங்கள், பிரதமா் மற்றும் முதல்வா் பொது நிவாரண நிதிகளுக்கு ரூ. 51 கோடி வரை நிதியை அளித்துள்ளன. அதுமட்டுமின்றி உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் தேவைப்படுபவா்களுக்கு இந்த வாரியங்கள் அளித்து வருகின்றன.

கரோனா நோய்த் தொற்று அறிகுறி உள்ளவா்களைத் தனிமைப்படுத்தலுக்கு உதவும் வகையில், நாடு முழுவதும் 16 ஹஜ் இல்லங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் இந்த ஹஜ் இல்லங்களை தனிமைப்படுத்தலுக்கான இடமாகப் பயன்படுத்தி வருகின்றன.

அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1.40 கோடி நிதியை அளித்துள்ளது. மேலும் அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி சாா்பில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு, அந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் கரோனா பரிசோதனைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, என மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT