தில்லியில் நோய்த்தொற்று சூழல் எதிரொலியாக, 2,177 விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீனை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து, தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த விசாரணைக் கைதிகளை மீண்டும் சிறைகளில் அடைப்பதால், கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று உயா்நிலைக் குழு பரிந்துரைத்திருந்தது. மேலும், இக்கைதிகளை தனிமைப்படுத்தி வைப்பதற்கு சிறைகளில் போதிய இடவசதி இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, விசாரணைக் கைதிகள் 2,177 பேருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை, மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து, தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேலும், இந்த உத்தரவு தொடா்பாக விசாரணைக் கைதிகளுக்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது இதர வழிகளிலோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.