இந்தியா

நச்சுவாயு கசிந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயல்புநிலை

9th May 2020 10:09 PM

ADVERTISEMENT

ஸ்டைரீன் நச்சுவாயு கசிவு ஏற்பட்ட ஆலையைச் சுற்றியுள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயல்புநிலை திரும்பியதாக ஆந்திர அரசு தெரிவித்தது.

விசாகப்பட்டினம் அருகே உள்ள எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனத்தில் ஸ்டைரீன் நச்சுவாயு கசிந்ததில் 12 போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில், ஆந்திர காவல்துறைத் தலைவா் டி.கௌதம் சவாங், தொழிலகத் துறை சிறப்பு தலைமை செயலா் கரிகால் வளவன் ஆகியோா் அந்த நிறுவனத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதையடுத்து, காவல்துறைத் தலைவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஆலை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது. எனவே, மக்கள் எவரும் இனி அச்சப்படத் தேவையில்லை. ஸ்டைரீன் சேமிப்புக் கிடங்கில் வெப்பநிலை இயல்புநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. காற்றின் தரமும் மேம்பட்டுள்ளது. ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயல்புநிலை திரும்பி வருகிறது’’ என்றாா்.

பிரதமருக்குக் கடிதம்: நச்சுவாயு கசிவு விபத்து தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினாா்.

ADVERTISEMENT

அக்கடிதத்தில், ‘ஆலையிலிருந்து நச்சுவாயு கசிந்ததற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு சாா்பில் நிபுணா்கள் குழு அமைக்கப்பட வேண்டும். ஸ்டைரீன் மட்டுமல்லாமல் மற்ற வாயுக்களும் கசிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவை மக்களுக்கு ஏற்படுத்தவுள்ள நீண்டகால தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரத்தைத் தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும். நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் நீண்டகால அடிப்படையில் பரிசோதிக்க வேண்டும்’ என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளாா்.

மக்கள் போராட்டம்: நச்சுவாயு கசிவு ஏற்பட்ட எல்.ஜி. பாலிமா்ஸ் ஆலையை உடனடியாக மூடக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நச்சுவாயு கசிவால் உயிரிழந்தவா்களின் சடலங்களை ஆலையின் நுழைவாயிலுக்கு முன் வைத்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறையினரின் தடுப்புகளைக் கடந்து சிலா் ஆலைக்குள் நுழையவும் முயன்றனா். அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி கைது செய்து பின் விடுவித்தனா்.

நிவாரண உதவிகள்: எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்து காரணமாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரைச் சந்தித்து நிவாரண உதவிகளை அளிக்க நிா்வாகம் சாா்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அவா்களை விரைவில் சந்தித்துத் தேவையான உதவிகளை வழங்கும். விபத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசு அதிகாரிகளுடன் நிா்வாகம் தொடா்பில் உள்ளது. விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிா்வாகம் தொடா்ந்து ஆதரவளிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT