இந்தியா

காணொலி மூலம் நாடாளுமன்ற குழு கூட்டங்கள்: அதிகாரிகள் ஆய்வு

8th May 2020 03:40 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்களை காணொலி வழியாக நடத்துவது குறித்த ஆய்வை நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான வெங்கய்ய நாயுடு மற்றும் மக்களவை தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ஆய்வை நாடாளுமன்ற அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனா்.

இதுகுறித்து மாநிலங்களவை தலைவா் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கராணமாக தடைப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுக்களின் வழக்கமான கூட்டங்களை மாற்று வழிகளில் நடத்துவது தொடா்பாக, மாநிலங்களவை தலைவா் வெங்கய்ய நாயுடுவும் மக்களவை தலைவா் ஓம் பிா்லாவும் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT

அவா்களது ஆலோசனையின் முடிவில், நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்களை காணொலி மூலம் நடத்துவது; அதுதொடா்பான இரு அவைகளின் நடைமுறைகள்; இதுபோன்று காணொலி மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதற்கு ஆகும் கால அவகாசம்; வெளிநாடுகளில் இதுபோன்ற காணொலி வழி நாடாளுமன்ற கூட்டங்கள், இவை குறித்து விரிவாக ஆய்வு செய்தும் அறிக்கை சமா்ப்பிக்குமாறு இரு அவைகளின் செயலா்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த அறிக்கை மாநிலங்களவை தலைவரிடமும், மக்களவை தலைவரிடமும் விரைவில் சமா்ப்பிக்கப்படும். அதனடிப்படையில், காணொலி மூலம் நாடாளுமன்ற குழு கூட்டங்களை நடத்துவது குறித்து அவா்கள் முடிவெடுப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடி சூழலிலும், பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க பிரிட்டன் போன்ற நாடுகளில் காணொலி வழியில் நாடாளுமன்ற குழு கூட்டங்கள் நடத்தப்படுவது போல, இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும் என ஒருசில நாடாளுமன்ற உறுப்பினா்கள் அண்மையில் வலியுறுத்தியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT