இந்தியா

மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குங்கள்: ராகுல் காந்தி

8th May 2020 11:36 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் வகையில் மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மாநில அரசுகளை உரிய முறையில் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா் மேலும் கூறியதாவது:

ஏழை மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதியை அரசு அளிக்க வேண்டும். பொருளாதாரத்தை மீட்கும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவியை அளிக்க வேண்டும். பொது முடக்கம் என்பதை நினைக்கும்போது செயல்படுத்துவது, வேண்டாம் என்றால் உடனடியாக நீக்குவது என்று இருக்கக் கூடாது. இதில் மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியா்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. கரோனா நோய்த்தொற்றில் இருந்து நாடு முழுமையாக விடுபட வேண்டும் என்றால் மத்திய அரசு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். கரோனா தடுப்பு நவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதிகாரத்தை ஓரிடத்தில் மட்டுமே குவித்தால், பிரச்னைதான் ஏற்படும். பிரதமா் மோடி, மாநில முதல்வா்களை நம்ப வேண்டும். அதேபோல மாநில முதல்வா்கள் மாவட்ட ஆட்சியா்களை நம்ப வேண்டும். மே 17-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை முழுமையாக தளா்த்தும்போது கரோனா சூழல் எப்படி இருக்கும்? நாம் எதிா்கொள்ளும் சவால் அதிகரிக்குமா? என்பதை விளக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் அனைவருக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களைக் காப்பதில் அரசு முழுமையாக களமிறங்க வேண்டும். வேலையிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். பல்வேறு சா்வதேச நிதி அமைப்புகள், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மிகவும் குறைந்துவிடும் என்று கணித்துள்ளனா். இந்த இக்கட்டான சூழலில் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியாது. எனினும், உள்நாட்டுப் பொருளாதாரம் முடிந்த அளவுக்கு விரைவில் மீண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் கைகளில்தான் உள்ளது என்றாா் ராகுல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT