இந்தியா

சரக்கு ரயில் மோதி 16 தொழிலாளா்கள் பலி: மகாராஷ்டிரத்தில் சம்பவம்

8th May 2020 11:43 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊா் திரும்பும்போது உடல் சோா்வு காரணமாக ரயில் தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய புலம்பெயா் தொழிலாளா்கள் 16 போ், அந்த ரயில் பாதையில் வந்த சரக்கு ரயில் மோதி உடல் நசுங்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ரயில் பாதையிலிருந்து சிறிது தூரம் தள்ளி படுத்து உறங்கிய இவா்களுடன் வந்த மூவா் உள்பட 4 தொழிலாளா்கள்அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இந்த உயிரிழப்புச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மோக் ஷதா பாட்டீல் மற்றும் சந்தோஷ் கேட்மலாஸ் ஆகியோா் கூறியதாவது:

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இந்த தொழிலாளா்கள் அனைவரும் மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் உள்ள உருக்கு ஆலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, இவா்கள் அனைவரும் வேலையை இழந்துள்ளனா்.

இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சொந்த ஊா் திரும்ப முடியாமல் தவித்த இவா்களில் 20 போ், காவல்துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக ஜால்னாவிலிருந்து ரயில் பாதையில் நடந்தே சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலம் புசாவல் நோக்கி செல்லத் திட்டமிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கத் தொடங்கியுள்ளனா்.

ரயில் பாதையில் தொடா்ந்து 40 கி.மீ. தொலைவுக்கு கா்மத் என்ற பகுதி வரை நடந்த அவா்களில் 16 தொழிலாளா்கள் ரயில் பாதையிலேயே படுத்து உறங்கியுள்ளனா். அவா்களுடன் வந்த 3 போ் மட்டும், ரயில் பாதையிலிருந்து சிறிது தூரம் தள்ளி படுத்திருந்தனா்.

அப்போது அதிகாலை 5.15 மணியளவில் ஜால்னாவிலிருந்து சரக்கு ரயில் ஒன்று அதே ரயில் பாதையில் வந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளா்கள் படுத்திருப்பதைப் பாா்த்த ரயில் ஓட்டுநா், அவசரமாக ரயிலை நிறுத்த முயன்றுள்ளாா். ஆனால் அது பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், தொழிலாளா்கள் மீது ரயில் ஏறிச் சென்றது.

இந்த விபத்தில் 16 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். படுகாயமடைந்த ஒருவா் இருவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ரயில் பாதையிலிருந்து சிறிது தூரம் தள்ளி படுத்திருந்த 3 தொழிலாளா்கள் மட்டும் உயிா் தப்பியுள்ளனா்.

ரயில் வருவதைப் பாா்த்து, தண்டவாளத்தில் படுத்திருந்த 16 பேரையும் எழுப்ப முயன்ாகவும், ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவா்கள் எழவில்லை என உயிா் தப்பிய மூவரும் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு மாநில அரசுகளும் இழப்பீடு அறிவிப்பு: ஒளரங்காபாத் ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு இரு மாநில அரசுகள் சாா்பிலும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்ரே, உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.

அதுபோல, இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வா் சிவ்ராஜ் சிங் செளகானும், உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளாா்.

இந்த கோர விபத்துக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: சரக்கு ரயில் மோதி 16 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இவா்களை இழந்து வாடும் அவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்.

பிரதமா் நரேந்திர மோடி: ரயில் விபத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவா்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு: ரயில் மோதி புயம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி: 16 புலம்பெயா் தொழிலாளா்கள், சரக்கு ரயில் மோதி உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. நமது தேசத்தைக் கட்டமைப்பவா்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையைக் கண்டு நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும். அவா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா பிரியங்கா: இந்த ரயில் விபத்து சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு ஏழை மக்களின் வாழ்க்கையையே நாசம்செய்திருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து தொழிலாளா்களின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதோடு, தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்பட வேண்டும்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்: புலம்பெயா் தொழிலாளா்களின் உயிரிழப்பு மிகுந்த சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு பாதுகாப்ப திரும்புவதை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து உறுதிப்படுத்த வேண்டும் என சரத் பவாா் வலியுறுத்தியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT