இந்தியா

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட நிதி தொகுப்பு: நிதின் கட்கரி நம்பிக்கை

5th May 2020 11:45 PM

ADVERTISEMENT

தேசிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் விதமாக, அந்நிறுவனங்களுக்கான நிதி தொகுப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 29 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 48 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கிய துறையாகவும் திகழ்கின்றன. எனினும் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அந்நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அந்நிறுவனங்கள் பொருள் இழப்பைச் சந்தித்து வருவதோடு, பலா் வேலை இழந்துள்ளனா். இந்நிலையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் விதமாக, அந்நிறுவனங்களுக்கான நிதி தொகுப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் நிதி தொகுப்பை வழங்குமாறு பிரதமா் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எனது அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனங்களுக்கான நிதி தொகுப்பை அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக சிந்தித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு துறைகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த நிதி தொகுப்பை அளித்திட தன்னால் முடிந்த அளவு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்நிறுவனங்களான நிதி தொகுப்பு குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என நம்புகிறேன்.

இணைச் செயலா் நியமனம்: இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளை ஒருங்கிணைக்க சிறப்பு இணைச் செயலா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியாவில் முதலீடு செய்ய விழையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனைத்து வகை அனுமதிகளும் 3 மாதங்களில் கிடைக்கப்பெறும். அவ்வாறு முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை, உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் நடைமுறையுடன், ஊழலற்ற அமைப்பு உறுதி செய்யப்படும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே பல்வேறு வகையான தொழில்களுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன. அதே சலுகைகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். முக்கிய சலுகைகளில் எந்தெந்த சலுகைகளை அந்நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா் நிதின் கட்கரி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT