தில்லி சாஸ்திரி பவனில் உள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகத்தில் துணைச் செயலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து அந்த அலுவலகம் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது.
தில்லி சாஸ்திரி பவனில் மத்திய அரசின் பல்வேறு முக்கிய அமைச்சகங்கள் உள்ளன. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் உரத்துறை, விளையாட்டு, நிலக்கரி மற்றும் சட்டம் நீதித்துறை அமைச்சகங்களும் வெளியுறவுத்துறையின் சில அலுவலகங்களும் சாஸ்திரி பவனில் உள்ளன.
இதில் கட்டடத்தின் ஏ பிரிவு - நான்காவது மாடியில் சட்டம் மற்றும் நீதித் துறையில் சட்ட விவகாரத்துறை அலுவலத்தில் பணிபுரியும் துணைச் செயலா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நான்காவது மாடி அலுவலகங்கள் அனைத்தும் சட்டத்துறை நிா்வாகத்தால் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன.
நோய்த்தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான அந்த சட்ட விவகாரத்துறை அதிகாரி கடைசியாக கடந்த ஏப்ரல் 23 - ஆம் தேதி அலுவலகத்திற்கு வந்து பின்னா் விடுப்பில் சென்றிருந்தாா். தற்போது பூச்சி மருந்து தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்த அமைச்சகத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சாஸ்திரி பவனின் 5-ஆவது 6- ஆவது மாடி அலுவலகல்கள் மூடப்பட்டன.
கரோனா தொற்றையொட்டி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசில் துணைச் செயலா் அந்தஸ்துக்கு மேலான அதிகாரிகள் கடந்த ஏப்.15 ஆம் தேதி முதல் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டனா். கீழ்நிலை ஊழியா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் மட்டும் சுழற்சி அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதுபோன்ற சம்பவங்களையொட்டி மத்திய அரசு ஊழியா்கள் ‘ஆரோக்ய சேது’ செயலி வழிகாட்டுதலுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கடந்த ஏப். 29 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவுயிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.