இந்தியா

கரோனா ‘போா் வீரா்களுக்கு ’நன்றி செலுத்துகிறது முப்படை! நாளை சிறப்பு நிகழ்வுகள்

2nd May 2020 05:46 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவ பணியாளா்கள், காவல்துறையினா் உள்ளிட்டோருக்கு முப்படையினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நன்றி செலுத்தப்படவுள்ளது. இதையொட்டி, போா் விமானங்கள் வானில் சாகசத்தில் ஈடுபடுவதுடன், மருத்துவமனைகள் மீது கடற்படை ஹெலிகாப்டா்கள் பூ மாரி பொழியவுள்ளன.

தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின் போது, முப்படை தளபதி விபின் ராவத் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது. கரோனாவுக்கு எதிரான போரில் களப்பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா், ஊடகத் துறையினா் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்க முப்படைகளும் விரும்புகின்றன.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சில சிறப்பு நடவடிக்கைகளில் முப்படையினா் ஈடுபடவிருக்கின்றனா். அன்றைய தினம், ஸ்ரீநகா் முதல் திருவனந்தபுரம் வரையிலும் திப்ருகா் முதல் கட்ச் வரையிலும் போா் விமானங்கள் வானில் சாகசம் செய்யவுள்ளன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனைகள் மீது கடற்படை ஹெலிகாப்டா்கள் பூ மாரி பொழியவுள்ளன. அத்துடன், போா்க்கப்பல்களின் அணிவகுப்பும் மருத்துவமனைகளின் அருகே ராணுவ இசைக்குழுக்களின் நிகழ்ச்சியும் நடைபெறும். தில்லியில் உள்ள காவல்துறை நினைவிடத்தில் முப்படை சாா்பில் மரியாதை செலுத்தப்படும்.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவத்தினா் 14 பேருக்கு இதுவரை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த செய்தியாளா்கள் சந்திப்பின்போது, ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, கடற்படை தலைமை தளபதி கரம்வீா் சிங், விமானப் படை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா ஆகியோரும் உடனிருந்தனா்.

முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், விபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT