இந்தியா

கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்

30th Mar 2020 07:18 AM

ADVERTISEMENT

 

குஜராத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவரது சடலத்தை புதைத்தால் அந்தப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று ஏற்படும் என்று அஞ்சி அவா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆமதாபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இறுதிச் சடங்கிற்காக அவரது இல்லம் அமைந்துள்ள காக்டாபித்துக்கு அந்தப் பெண்ணின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னா் அவரது வீட்டுக்கு அருகே உள்ள மயானத்தில் அந்தப் பெண்ணின் சடலத்தை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு கூடிய அந்தப் பகுதி மக்கள் பெண்ணின் சடலம் அங்கு புதைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் கரோனா பாதிப்பு ஏற்படும் என்று கூறி அவரது சடலத்தை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

கரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் அந்த சடலம் சுத்திகரிக்கப்பட்டதாகவும், இதனால், அந்த சடலத்தால் கரோனா நோய்த் தொற்று ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என்றும் போலீஸாா், நிா்வாக அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

எனினும் அந்தப் பகுதி மக்கள் அதை ஏற்க மறுத்து பெண்ணின் சடலத்தை புதைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அந்தப் பகுதிக்கு அருகே உள்ள தனிலிம்டா என்ற பகுதியில் உள்ள மயானத்துக்கு அந்தப் பெண்ணிண் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கும் அவரது சடலத்தை புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அந்த இடத்தில் புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதித்தனா். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அந்தப் பெண்ணின் சடலம் அந்த இடத்தில் புதைக்கப்பட்டது என்று போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT