இந்தியா

ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் தெலங்கானாவில் கரோனா இல்லாத நிலை உருவாகும்: சந்திரசேகர ராவ்

30th Mar 2020 12:25 PM

ADVERTISEMENT

 

ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் தெலங்கானாவில் கரோனா வைரஸ் இல்லாத நிலை ஏற்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதில் தெலுங்கானா மாநிலத்தில் 70 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், 'கரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் முழுவதும் குணம் அடைந்த பின்னரே டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். தற்போது 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்த 25,937 பேர் அரசாங்கத்தின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் நிறைவடையும் .

ADVERTISEMENT

எனவே, ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு புதிய வழக்குகள் எதுவும் இல்லாதபட்சத்தில் தெலங்கானாவில் கரோனா நோயாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள்.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் சுய தனிமைப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, இந்த காலகட்டத்தில் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுக்க முடியும். 

ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் கிராமத்தின் எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. முறையான சுகாதாரப் பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மக்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவர்கள்,செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் சேவை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கரோனா குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனையும் அரசாங்கம் கண்காணித்து வருகிறது' என்று தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT