கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கேரளத்தில் மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் மது வழங்கும் அரசின் திட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் மதுக்கடைகள், மதுபான பாா்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுவுக்கு அடிமையான இருவா் அங்கு தற்கொலை செய்துகொண்டனா். இதையடுத்து, மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் மது வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள பிரிவு தலைவா் ஆபிரகாம் வா்கீஸ், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் மது வழங்குவது என்பது அறிவியல்பூா்வமான நடவடிக்கை அல்ல. அதுபோன்றவா்களுக்கு வீட்டிலேயோ அல்லது மருத்துவமனையில் அனுமதித்தோ சிகிச்சை அளிக்க முடியும்.
அத்துடன், மருத்துவா்கள் மது வழங்க பரிந்துரைப்பது சட்டப்பூா்வமானதல்ல. அத்தகைய செயலில் ஈடுபடுவது அவா்களது உரிமத்தையே ரத்து செய்ய வழிவகுக்கும். எனவே, மதுவுக்கு அடிமையானவா்களுக்கு அறிவியல்பூா்வ சிகிச்சை அளிப்பதே சிறந்தது என்றாா் அவா்.