இந்தியா

கட்டணங்களைக் கட்டுமாறு நிர்பந்திக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு!

30th Mar 2020 08:10 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு : தற்போதைய சூழலில் பள்ளிக் கட்டணங்களை உடனடியாக கட்டச் சொல்லி நிர்பந்திக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கர்நாடக கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1071 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 29  பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால் அதேநேரம் கர்நாடகாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் , 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர்களிடமிருந்து கட்டணம் மற்றும் நன்கொடைகளை வசூலிப்பதாகவும், உடனடியாக கட்டும்படி நிர்பந்திப்பதாகவும் புகார்கள் வெளியானது. மக்கள் மொத்தமாக முடங்கியுள்ள இந்த நேரத்தில் இப்படி நடந்து கொள்ளும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன

இந்நிலையில் தற்போதைய சூழலில் பள்ளிக் கட்டணங்களை உடனடியாக கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தெரிவித்துள்ளதாவது:

சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் இந்த ஆண்டுக்கான கட்டணங்களைக் கட்ட சொல்லி வலியுறுத்துகின்றன. மேலும் எஸ்எம்எஸ் மூலம் பெற்றோருக்கு நினைவூட்டல் செய்திகளையும் அனுப்புகின்றன.

எனவே மாநில பொது அறிவுறுத்தல் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஒரே பள்ளியில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு 2020-21 ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டும்படி அடுத்த உத்தரவு வரை வற்புறுத்தக் கூடாது.

மேலும் அரசாங்க உத்தரவை மீறும் நிறுவனத்தின் மீது கல்விச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். அல்லது நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தல், தொற்று நோய்கள் சட்டம் 1887 மற்றும் சிஆர்பிசி ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே காலக்கெடுவை அறிவித்த பள்ளிகள் அரசின் அடுத்த அரசாங்க உத்தரவு வரை அவர்கள் அனுப்பிய சுற்றறிக்கைகளை வாபஸ் பெற்று நிறுத்தி வைக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான புதிய தேதியை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT