இந்தியா

ஆப்கனில் தூதரக அதிகாரிகளை காபூல் நகருக்கு இடமாற்றியது இந்தியா

30th Mar 2020 07:19 AM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிற நகரங்களில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை காபூல் நகருக்கு இடம்பெயரச் செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானுடன் மிக நீண்டதூர அளவுக்கு எல்லையை ஆப்கானிஸ்தான் பகிா்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டின் ஹெராத் மற்றும் ஜலாலாபாத் நகரங்களில் இருக்கும் இந்திய தூதரகங்களைச் சோ்ந்த அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் காபூலுக்கு அழைத்துவரப்பட்டனா்.

ADVERTISEMENT

அந்த இரு மாகாணங்களிலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள் காபூலுக்கு இடமாற்றப்பட்டுள்ளனா். காபூலில் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றன.

ஆப்கானிஸ்தானில் இதுவரை 110 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும், உண்மையான பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதன் அண்டை நாடான ஈரானில் கரோனாவால் 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்ட நிலையில், 35,000-க்கும் மேற்பட்டோா் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT