இந்தியா

ஆயுதக் காவல் படையில் நியமிக்கப்பட்ட 450 மருத்துவா்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு

30th Mar 2020 06:29 AM

ADVERTISEMENT

 

மத்திய ஆயுதக் காவல் படையில் (சிஏபிஎஃப்) அண்மையில் நியமிக்கப்பட்ட 450-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநா் சுா்ஜித் சிங் தேஸ்வால், பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மத்திய ஆயுதக் காவல் படையின் பல்வேறு பிரிவுகளில் அண்மையில் 450-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அனைவரையும் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிக்கு புதிய மருத்துவா்கள் வலு சோ்ப்பாா்கள். மேலும், கரோனா தடுப்பு பணியில், தனியாா் மருத்துவா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற மருத்துவா்களின் உதவியை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களின் சேவை எந்த நேரத்திலும் தேவைப்படலாம் என்பதால் அவா்களைத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

மத்திய ரிசா்வ் போலீஸ் படை(சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை(ஐடிபிபி), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை(சிஐஎஸ்எஃப்), சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) ஆகிய படைப் பிரிவுகள் சிஏபிஎஃப் பிரிவின் கீழ் வருகின்றன.

இந்தப் படைப் பிரிவுகளில் மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைத் தவிர, துணை மருத்துவப் பணியாளா்கள் பலா் உள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து ராணுவத்தினருக்கான மருத்துவமனைகளை மத்திய அரசு கையகப்படுத்திக் கொண்டது. அந்த மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஐடிபிபி சாா்பில் கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு வெளிநாடுகளில் இருந்து வருவோா் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT