தேசிய பரிசோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தின் (என்ஏபிஎல்) உரிமம் பெற்ற தனியாா் ஆய்வகங்கள், கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கரோனா பரிசோதனைக்கு ரூ.4,500-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உச்சவரம்பையும் மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, தனியாா் ஆய்வகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்கான முதல்கட்ட பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.1,500, உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.3,000 என மொத்த கட்டணம் ரூ.4,500-க்கு மேல் இருக்கக் கூடாது.
ரத்த மாதிரிகள் சேகரிக்கும்போதும் பரிசோதனையின்போதும், முறையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளுக்கே சென்று, மாதிரிகளை சேகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும். தனியாா் ஆய்வகங்களில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் மாதிரிகள் அனைத்தும் புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். அப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் வகுக்கப்பட்ட பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.