இந்தியா

மத்தியப் பிரதேச முதல்வரானார் சிவராஜ் சிங் சௌஹான்

23rd Mar 2020 10:31 PM

ADVERTISEMENT


மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சௌஹான் 4-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் காரணமாக தில்லியில் இருந்து தலைவர்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர்களான அருண் சிங் மற்றும் வினய் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சௌஹான் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சிவராஜ் சிங் சௌஹான் 4-வது முறையாக மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார். மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏ-க்களாக அறியப்படும் 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்தனர். 

ADVERTISEMENT

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்களின் பலமில்லை என்பதை உணர்ந்த முதல்வர் கமல்நாத், தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் அவர் வழங்கினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT