இந்தியா

கரோனா எதிரொலி: திருப்பதியில் பக்தர்கள் பங்கு கொள்ளாத பிரம்மோற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து

23rd Mar 2020 08:52 PM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராமஸ்வாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பங்கு கொள்ள அனுமதி மறுப்பு தெரிவித்ததுடன், தெப்போற்சவம், தேரோட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள ராமசந்திர புஷ்கரணி அருகில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோயில் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நாட்களில் உற்சவமூர்த்திகள் காலை, இரவு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம். அதன்படி திங்கட்கிழமை காலை முதல் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆனால் கெரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பிரம்மோற்சவ நாட்களில் மாடவீதியில் நடக்கும் வாகன சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலை நடக்கும் தேரோட்டம், நிறைவு நாள் காலை நடக்கும் தீர்த்தவாரி உள்ளிட்டவையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் காலை, இரவு உற்சவமூர்த்திகள் கோயிலுக்குள் மட்டுமே வலம் வருவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஸ்ரீராமநவமியை ஒட்டி நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவம் என்றாலே வாகன சேவையை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். அதனால் மாடவீதியை சுற்றி திருவிழா கூட்டம் போல் மக்கள் நடமாடுவர். மாடவீதியை சுற்றிலும் கடைகள், சிறுகுழந்தைகளுக்கு ராட்டினம் என அனைத்தும் நிறைந்திருக்கும். முதல் முறையாக தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் இல்லாமல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இது திருப்பதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT