ஒருநாளைக்கு 10,000 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான திறன் நம்மிடம் உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா மற்றும் சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல்ராம் பார்கவா பேசியதாவது:
"கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எளிதான வழி, வெளியே வரும் மக்களை தனிமைப்படுத்துவது. இந்த வைரஸ் காற்றில் இருக்காது. இது சிறுதுளிகளின்மூலம் பரவும். இந்த நோய் குறித்து புரிந்துகொள்வது அவசியமாகும். 80% பேர் குளிர்க்காய்ச்சல் போல் உணர்ந்து குணமடைந்துவிடுவார்கள். 20% பேர் இருமல், குளிர், காய்ச்சல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வார்கள். அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 5% மக்களுக்கு உகந்த சிகிச்சையளிக்கப்படும். சில பேருக்கு புதிய மருந்துகள் கொடுக்கப்படும்.
இதுவரை 15,000 முதல் 17,000 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். ஒருநாளைக்கு 10,000 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான திறன் நம்மிடம் உள்ளது. அதாவது, ஒரு வாரத்துக்கு 50,000 முதல் 70,000 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இதுவரை 60 தனியார் ஆய்வகங்கள் பரிசோதனைகள் நடத்த பதிவு செய்துள்ளன. ஹரியாணாவின் ஜாஜ்ஜர் பகுதியில் உள்ள எய்ம்ஸ் கட்டடத்தில் 800 படுக்கை வசதிகள் உள்ளன. இவையனைத்தும் முழுக்கமுழுக்க கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்தப்படவுள்ளன" என்றார்.