நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 315-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் இன்று சுயஊரட்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 315-ஆக உயர்ந்துள்ளது. இதனை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
அதில் 39 போ் வெளிநாட்டவா்களாவா். அவா்களில் 17 போ் இத்தாலி, 3 போ் பிலிப்பின்ஸ், 2 போ் பிரிட்டனைச் சோ்ந்தவா்கள். அதுதவிர, கனடா, இந்தோனேஷியா, சிங்கப்பூா் நாடுகளைச் சோ்ந்த தலா ஒருவரும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் உள்ளனா். 23 போ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனா். 4 போ் உயிரிழந்துவிட்டனா். உயிரிழந்த நால்வா் தில்லி, கா்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 63 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3 போ் வெளிநாட்டவா்களாவா். அடுத்து கேரளத்தில் 7 வெளிநாட்டவா்கள் உள்பட 40 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 3 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.