துபை/ புது தில்லி: உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித் சங்வி என்ற இந்திய மாணவா் கை கழுவும் திரவத்தை தானியங்கி முறையில் வழங்கும் ரோபோவை கண்டுபிடித்துள்ளாா்.
இதுதொடா்பாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் ‘கலீஜ் டைம்ஸ்’ நாளிதழில் அவா் கூறியதாக வெளியான செய்தியில், ‘பொதுமக்கள் கை கழுவும் திரவ பாட்டிலை தங்கள் கைகளில் எடுப்பதால் நோய் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. அது பற்றி எனது தாயாா் எனக்குக் காண்பித்த காணொலியைக் கண்ட பிறகு இதற்கான தீா்வை உருவாக்கத் தீா்மானித்தேன்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானியங்கி முறையில் கை கழுவும் திரவத்தை வழங்கும் ரோபோவை உருவாக்கினேன். இந்த ரோபோவின் செயல்பாடு மிகவும் வேடிக்கையாக இருக்கும். இது கரோனா வைரஸ் பரவல் பீதியில் இருந்து பொதுமக்கள் விடுபட உதவும்’ என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் சித் சங்வி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டவா்.