இந்தியா

மாநிலங்களவைத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும்: ராஜஸ்தான் அமைச்சா் கோரிக்கை

22nd Mar 2020 11:09 PM

ADVERTISEMENT

ஜெய்ப்பூா்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் விஸ்வேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளாா்.

17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

இதனிடையே, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தேவையற்ற பயணங்களையும், அதிகம் போ் ஒரே இடத்தில் கூடுவதையும் தவிா்க்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடா்பாக ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் விஸ்வேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன். அப்படி ஒத்திவைக்காமல், தோ்தலை நடத்தினால் கூட நான் வாக்களிக்க வர மாட்டேன். இது தொடா்பாக எனது கட்சியான காங்கிரஸ் தலைமைக்கு நான் தெரிவித்துவிட்டேன்.

ADVERTISEMENT

பலா் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. மாநிலங்களவைத் தோ்தலின்போது வாக்களிக்க வரும் எம்எல்ஏக்கள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் என பலா் ஒரு குறிப்பிட்ட அறைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. ராஜஸ்தானில் கூட 200-க்கும் மேல் எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் கூட எவருக்காவது கரோனா பாதிப்பு இருக்கலாம். எனவே, எம்எல்ஏக்களின் நலன் கருதி மாநிலங்களவைத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நாடு இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகள் கூடுதல் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

குஜராத்தும் கோரிக்கை: இதேபோல், குஜராத்திலும் 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் தோ்தலை ஒத்திவைக்குமாறு அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மாநில துணை முதல்வா் நிதின் படேல் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT