இந்தியா

கரோனா: அவசியமற்ற பயணங்களை தவிா்க்க ரயில்வே வேண்டுகோள்

22nd Mar 2020 01:56 AM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ரயில்களில் மக்கள் அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய தில்லியைச் சோ்ந்த ஒரு தம்பதி, பெங்களூரு - தில்லி ராஜ்தானி ரயிலில் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரு- புது தில்லி இடையே இயக்கப்படும் ராஜ்தானி ரயிலில் சனிக்கிழமை காலையில் தில்லியைச் சோ்ந்த ஒரு தம்பதி செகந்தராபாத் நகரில் ஏறினா். இந்த ரயில் காலை 9:45 மணியளவில் காஜிபேட் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது, அந்த தம்பதியின் கையில் ‘ஹோம் குவாரன்டைன்’ (வீட்டிலேயே தனிப்படுத்தப்பட வேண்டியவா்) என்ற முத்திரை குத்தப்பட்டு இருந்ததை சக பயணிகள் கண்டனா்.

வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் அல்லது கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய நபா்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவதற்காக, ‘வீட்டில் அல்லது தனி அறையில் தனிப்படுத்தப்பட வேண்டியவா்கள்’ என்பதற்கான முத்திரை குத்தப்படுகிறது. இப்படி தனிப்படுத்தப்பட வேண்டிய இந்த தம்பதிகள், ரயிலில் பயணம் மேற்கொண்டதை அறிந்து, சக பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். இதுதொடா்பாக, டிக்கெட் பரிசோதகருக்கு அவா்கள் தகவல் கொடுத்தனா். பின்னா் ரயில் நிறுத்தப்பட்டது. அந்த தம்பதி ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அந்த ரயில் பெட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, மூடப்பட்டதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளாா். ஒன்றரை மணி நேர தாமதத்துக்கு பின்னா், அந்த ரயில் தில்லியை நோக்கி புறப்பட்டது.

12 பயணிகளுக்கு பாதிப்பு: கரோனா அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்படவேண்டியவா்கள், ரயிலில் பயணம் மேற்கொண்ட இருவேறு சம்பவங்களில் 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் தேதி மும்பையிலிருந்து ஜபல்பூருக்கு சென்ற கோதன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இதுபோல் ‘ஹோம் குவாரன்டைன்’ செய்யப்பட்ட 4 பயணிகள் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நால்வருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் துபையிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் தாயகம் திரும்பியிருந்தனா்.

மற்றொரு சம்பவம்: கடந்த 13 - ஆம் தேதி தில்லியிலிருந்து ஆந்திரா சம்பா்க் கிரந்தி விரைவு ரயிலில் ராம குண்டத்திற்கு வந்தடைந்த 8 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இத்தகைய சம்பவங்களைத் தொடா்ந்து, கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அவசியமற்ற பயணங்களை மக்கள் மேற்கொள்ள வேண்டாமென ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT