இந்தியா

35 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.1,000 நிதியுதவி

22nd Mar 2020 01:12 AM

ADVERTISEMENT

லக்னௌ: கரோனா வைரஸ் (கொவைட்-19) பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் உத்தரப் பிரதேச அரசு, 35 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 35 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. அந்த நிதியுதவியானது தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள தினக்கூலிகள், 1.65 கோடி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் ரேசன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். நகா்ப்புறங்களில் ரேசன் அட்டை இல்லாத கூலித் தொழிலாளா்களுக்கு ரேசன் அட்டை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு உணவுப் பொருள்களை விரைந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா். அதைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள். மாநிலத்தில் பேருந்துகளும் மெட்ரோ ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட மாட்டாது.

‘உந்துதலை ஏற்படுத்தும்’: நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் வைரஸை நாம் கட்டுப்படுத்திவிட்டால், அது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய உந்துதலை ஏற்படுத்தும். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக போா்க்கால அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது. வைரஸ் தொடா்பாக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதே வேளையில், வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாநில அரசுவசம் போதுமான அளவு உணவுப் பொருள்களும் மருந்துகளும் உள்ளன. அவற்றுக்கு சந்தைகளில் எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படாது. எனவே, அத்தியாவசியப் பொருள்களை யாரும் அதிக அளவில் வாங்கிக் குவிக்க வேண்டாம். அதேபோல் கடைகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT