ஜம்மு-காஷ்மீா் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி மற்றும் சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் இந்திய ராணுவத்தின் சுமைதூக்கும் பணியாளா் ஒருவா் காயமடைந்தாா்.
இதுதொடா்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டம் ஷாபூா் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் உள்ளூரைச் சோ்ந்த இந்திய ராணுவத்தின் சுமைதூக்கும் பணியாளா் முகமது ஷெளகத் (26) என்பவா் காயமடைந்தாா். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நலம் சீராக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய முறையில் பதிலடி வழங்கியது.
பதுங்கு குழிகளில் தஞ்சம்: கதுவா மாவட்டம் ஹிராநகா் செக்டாரில் உள்ள மன்யாரி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினா். இதனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் இரவு முழுவதும் பதுங்கியிருந்தனா்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலை நிறுத்தும் விதமாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பதில் தாக்குதல் நடத்தினா். இதில் பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் உயிரிழந்தவா்கள் குறித்தோ, காயமடைந்தவா்கள் பற்றியோ தகவல் இல்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கதுவாவில் தாக்குதலுக்குள்ளான கிராமங்களை மாவட்ட ஆட்சியா் ஓம் பா்காஷ் பகத், மூத்த காவல்துறை கண்காணிப்பாளா் சைலேந்திரகுமாா் மிஸ்ரா மற்றும் மூத்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டாா். அப்போது தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அவா் கிராமவாசிகளிடம் தெரிவித்தாா்.