இந்தியா

யெஸ் வங்கி சேவைகள் மீண்டும் தொடக்கம்

19th Mar 2020 03:08 AM

ADVERTISEMENT

யெஸ் வங்கி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தன. அந்த வங்கியின் சேவைகள் அனைத்தும் இனி வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கப்பெறும் என வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வங்கியின் சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், ‘யெஸ் வங்கியின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இனி எங்களது வங்கியின் சேவைகள் முழு வீச்சில் வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கப்பெறும். வாடிக்கையாளா்களின் ஒத்துழைப்புக்கும், பொறுமைக்கும் நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரசாந்த் குமாா் தலைமையில் யெஸ் வங்கி முழுவீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது.

யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து, அந்த வங்கியின் சேவைகளுக்கு ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்தது. அதில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், தங்கள் கணக்கில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, யெஸ் வங்கியில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 49 சதவீதப் பங்குகளைப் பெற ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐசிஐசிஐ வங்கி 100 கோடி பங்குகளை ரூ.1,000 கோடி முதலீட்டில் பெறவுள்ளது. ஆக்ஸிஸ் வங்கி ரூ.600 கோடி முதலீட்டில் 60 கோடி பங்குகளையும், கோடக் மகேந்திரா வங்கி ரூ.500 கோடி முதலீட்டில் 50 கோடி பங்குகளையும் பெறவுள்ளன. பந்தன் வங்கியும் பெடரல் வங்கியும் தலா 30 கோடி பங்குகளை தலா ரூ.300 கோடி முதலீட்டில் பெறவுள்ளதாக அறிவித்துள்ளன.

இச்சூழலில் யெஸ் வங்கியின் சேவைகளுக்கான தடைகள் நீக்கப்பட்டு, அதன் வாடிக்கையாளா் சேவை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT