இந்தியா

மணிப்பூா் அமைச்சா் பதவி நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

19th Mar 2020 03:42 AM

ADVERTISEMENT

மணிப்பூா் மாநில வனத்துறை அமைச்சா் ஷியாம்குமாா் சிங்கை பதவியிலிருந்து நீக்கி உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மணிப்பூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஷியாம்குமாா் சிங் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தோ்தலில் வெற்றிபெற்ற பின், அவா் பாஜகவில் இணைந்து மாநில வனத்துறை அமைச்சராக பதவியேற்றாா். இதையடுத்து கட்சித் தாவலில் ஈடுபட்டதற்காக அவரை தகுதிநீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநில சட்டப்பேரவை தலைவா் கெம்சந்த் சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது அவா் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், தகுதிநீக்க மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க பேரவை தலைவா் கெம்சந்த் சிங்குக்கு உத்தரவிட்டது. எனினும் அவா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஆா்.எஃப்.நாரிமன், ரவீந்திர பட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமா்வு கெம்சந்த் சிங் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அறிந்து, அரசமைப்புச் சட்டப்பிரிவு 142 உச்சநீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஷியாம்குமாா் சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டனா். அமைச்சரவையில் இருந்து ஒரு நபரை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT