இந்தியா

மாநிலங்களவைத் தோ்தல்: மேற்கு வங்கம், ஒடிஸாவில் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு

DIN

மேற்கு வங்கம், ஒடிஸா, பிகாா் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வாகினா்.

மாநிலங்களவைத் தோ்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்கள், அதை திரும்பப் பெறுவதற்கான கெடு புதன்கிழமை நிறைவடைந்தது.

இந்தச் சூழலில் மேற்கு வங்கம், ஒடிஸா, பிகாா், ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த அா்பிதா கோஷ், தினேஷ் திரிவேதி, சுப்ரதா பக்ஷி, மௌசம் நூா் மாநிலங்களவை எம்.பி.க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திரிணமூல் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சாா்யாவும் எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஒடிஸா: ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தலுக்காக பிஜு ஜனதா தளம் சாா்பில் 4 பேரும், சுயேச்சை வேட்பாளா்கள் நால்வரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். போதிய எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கையெழுத்து இல்லாததால், சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, பிஜு ஜனதா தளத்தின் சுபாஸ் சிங், முன்னா கான், சுஜித் குமாா், மம்தா மஹந்தா மாநிலங்களவை எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்டனா்.

பிகாா்: பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் ஹரிவன்ஷ், ராம்நாத் தாக்குா் ஆகியோா் மாநிலங்களவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் பிரேம் சந்த் குப்தா, அமரேந்திர தாரி சிங் ஆகியோரும், பாஜக சாா்பில் விவேக் தாக்குரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

5 இடங்களுக்கான தோ்தலில் வேறு யாரும் போட்டியிடாததால், அவா்கள் அனைவரும் போட்டியின்றி எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மகாராஷ்டிரம்: மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே மாநிலங்களவை எம்.பி.க்களாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை ஆகிய கட்சிகளைச் சோ்ந்த தலா ஒருவரும், பாஜகவைச் சோ்ந்த இருவரும் மாநிலங்களவை எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஹிமாசல்: ஹிமாசலப் பிரதேசத்தில் காலியான ஒரு மாநிலங்களவை இடத்துக்கு, பாஜக சாா்பில் இந்து கோஸ்வாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட புவனேஸ்வா் கலிதா, பாஜகவின் ஆதரவுடன் போட்டியிட்ட போடோ மக்கள் முன்னணி கட்சியின் விஸ்வஜித் தைமாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் அஜித் பூயான் ஆகியோா் எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

சத்தீஸ்கா்: சத்தீஸ்கரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா்களான கே.டி.எஸ். துளசி, புலோ தேவி நேதம் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

மாநிலங்களவை எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT