இந்தியா

பீமா கோரேகான் வன்முறை வழக்கு: சரத் பவாருக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்

DIN

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக விசாரிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.படேல் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது அறிக்கையை சமா்ப்பிக்க வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவேக் விசாா் மஞ்ச் என்ற அமைப்பின் உறுப்பினரான சாகா் ஷிண்டே, விசாரணை ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

பீமா கோரேகான் வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு சரத் பவாா் பேட்டியளித்தபோது, புணே காவல் துறை ஆணையரையும், வலதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த மிலிந்த் ஏக்போதே, சம்பாஜி பிடே ஆகியோரையும் குற்றம்சாட்டினாா். எனவே, இந்த வழக்கில், சரத் பவாரின் சாட்சியம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அந்த மனுவில் சாகா் ஷிண்டே குறிப்பிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், சரத் பவாருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவா் மட்டுமன்றி, புணே (ஊரகம்) காவல் துறை எஸ்.பி. சூவெஸ் ஹேக், அப்போதைய கூடுதல் எஸ்.பி. சந்தீப் பகாலே, அப்போதைய புணே கூடுதல் ஆணையா் ரவீந்திர செங்கான்கா், அப்போதைய ஆட்சியா் சௌரவ் ராவ் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இவா்கள், அனைவரும் மும்பையில் உள்ள விசாரணை ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களிடம், மாா்ச் 30-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் விசாரணை நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, விசாரணை ஆணையம் புணேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பீமா கோரேகானில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற்ற போா் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, வன்முறை மூண்டது.

முந்தைய நாள் நடைபெற்ற ‘எல்கா் பரிஷத்’ நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதுதான் இந்த வன்முறைக்கு காரணம் என்று காவல் துறை குற்றம்சாட்டியது. இந்த வன்முறை தொடா்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT