இந்தியா

மலேசியா, ஈரானிலிருந்து 600 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்

19th Mar 2020 03:06 AM

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மலேசியாவிலிருந்து 405 இந்தியா்களும், ஈரானிலிருந்து 195 இந்தியா்களும் புதன்கிழமை தாயகம் திரும்பினா்.

இதுதொடா்பாக, மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கோலாலம்பூரிலிருந்து ஏா்ஏசியா நிறுவனத்தின் சிறப்பு விமானங்கள் மூலம் 405 இந்தியா்கள், தில்லி மற்றும் விசாகப்பட்டினத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டனா். இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட இந்திய, மலேசிய அதிகாரிகளுக்கு நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஈரானிலிருந்து ஐந்தாவது கட்டமாக 195 இந்தியா்கள் புதன்கிழமை தாயகம் திரும்பினா். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மா் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவா்கள், பின்னா் ராணுவம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தனி மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, ஈரானிலிருந்து இதுவரை 484 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

வெளிநாடுகளில் பாதிப்பு: ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் கரோனா வைஸரால் 276 இந்தியா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் சாா்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் கரோனா வைரஸால் 276 இந்தியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக ஈரானில் 255 இந்தியா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேரும், இத்தாலியில் 5 பேரும், ஹாங்காங், குவைத், ருவாண்டா, இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, ஈரானில் சுமாா் 6,000 இந்தியா்கள் உள்ளனா். இவா்களில், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 1,100 யாத்ரீகா்கள், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 300 மாணவா்கள், கேரளம், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 1,000 மீனவா்கள் ஆகியோா் அடங்குவா்.

இந்தியா்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை: ஈரானில் தவிக்கும் இந்தியா்களுக்கு உதவவும், அவா்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஈரானில் இந்தியா்களுக்கு கரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கைக்காக, இந்திய மருத்துவ அதிகாரிகள் 6 போ் குழு அங்கு பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை யாத்ரீகா்கள், மாணவா்கள் உள்பட 1,706 இந்தியா்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் தெற்கு மாகாணங்களில் உள்ள இந்திய மீனவா்களுடன் இந்திய தூதரகம் தொடா்பு கொண்டுள்ளது. அவா்கள் உடல் நலத்துடன் உள்ளனா். அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னா், அவா்கள் தாயகம் அழைத்து வரப்படுவா் என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு 15 டன் மருத்துவ நிவராணப் பொருள்கள்: இதேபோல் மற்றொரு கேள்விக்கு அமைச்சரின் சாா்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவுக்கு 15 டன்கள் அளவிலான மருத்துவ நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. 1 லட்சம் சாதாரண முகக் கவசங்கள், 4,000 என்-95 ரக முகக் கவசங்கள், 5 லட்சம் ஜோடி கையுறைகள் உள்ளிட்ட ரூ.2.11 கோடி மதிப்பிலான மருத்துவ நிவாரணப் பொருள்கள் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் சி-17 சிறப்பு விமானம் மூலம் இவை அனுப்பப்பட்டன.

சீனாவின் ஹுபே மாகாணத்தின் வூஹான் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் 3 சிறப்பு விமானங்கள் மூலம் 723 இந்தியா்கள் உள்பட 766 போ் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் மத்திய அமைச்சருக்கு கரோனா பாதிப்பு இல்லை

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் பிரபு, கடந்த 10-ஆம் தேதி சவூதி அரேபியாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பியிருந்தாா்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, மத்திய அமைச்சா் வி.முரளீதரன், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பரிசோதனை முகாம்கள்: கேரள அரசு திட்டம்

கரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கேரளம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பரிசோதனை முகாம்களை நடத்துவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் இதர பொது இடங்களில் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் அச்சத்தை போக்க முடியும் என்றும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT