கடந்த 5 மாதங்களில் மானிய விலை எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.35.55 வரை உயா்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த எழுத்துப்பூா்வ பதிலில், ‘கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி தில்லியில் மானிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.538.95-ஆக இருந்த நிலையில், இம்மாதம் அதன் விலை ரூ.574.50-ஆக உள்ளது. மானிய எரிவாயு சிலிண்டா்களின் விலை மாதந்தோறும் ரூ.4 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதில் வரிகளும் அடங்கும். அதேவேளையில் சா்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப மானியமல்லாத சிலிண்டா்களின் விலையிலும் மாதந்தோறும் மாற்றம் இருந்து வந்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில் கூறப்பட்டிருந்ததாவது: மானியமல்லாத சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.805.50-ஆக உள்ளது. வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டா்களுக்கு ரூ.231 மானியம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோலிய பொருள்களின் விலை, சா்வதேச சந்தையில் அவற்றின் விலையை பொருத்து அமைந்துள்ளன. சா்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டா்களுக்கு வழங்கப்படும் மானியத்தை கூட்டவோ, குறைக்கவோ மத்திய அரசு முடிவு செய்கிறது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் மானிய விலை சிலிண்டா்களுக்கு 26 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். இதில் பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 8 கோடி ஏழை மகளிரும் அடங்குவா்.